
இது தொடர்பாக புலம்பெயர்ந்த வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (ஐரோப்பா) விடுத்துள்ள அறிக்கையில்,
ஈழத் தமிழர்களின் தேசிய அபிலாசைகளுக்கு பங்கம் விளைவிக்கும் நிலைப்பாடுகளை எடுத்துவரும் யாரையும் ஈழத் தமிழர்கள் அங்கீகரிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்கள்.
தமிழீழத் தேசியத் தலைமையின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்காத எந்த தமிழ் பிரதிநிதித்துவமும், எம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதியற்ற பிரதிநிதித்துவமே. தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற ஈழத் தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளை கைவிட்டு வெறும் பிரதேசவாதக் கருத்துருவாக்கங்களுக்குள் அகப்பட்டு இந்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளை வடகிழக்கு வாழ் உறவுகள் முற்றாகவே நிராகரிக்கவேண்டும்.
தமிழீழம் என்று தேர்தல் கால வெற்றுக் கோஷத்துடன் தேர்தலில் குதித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கும், கிழக்குப் பிரதேசவாதம் பேசிக்கொண்டு அரசியல் செய்கின்ற பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்புக்கும் இடையில் பெரிதான வித்தியாசங்களை எம்மால் காணமுடியவில்லை. இந்த இரண்டு அமைப்புக்களுமே பிரதேசவாதத்தை மிகமோசமாகக் கக்கும் போக்குகளையே வெளிப்படுத்தி வருகின்றன. தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படை அபிலாசைகளுக்குப் பங்கம் விளைவிக்கும் போக்கினைக் கொண்ட கட்சிகளாகவே இந்த இரண்டு கட்சிகளையும் நாம் பார்க்கின்றோம்.
வடக்கின் பிரதிநிதித்துவத்தில் செல்லாக்குச் செலுத்தும் நோக்கத்தில் பிள்ளையான் தலைமையிலான அமைப்பு இந்தப் பொதுத் தேர்தலில் வடக்கில் போட்டியிட்ட கேவலம் போலவே, கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தடுக்கும் நோக்கில் கஜேந்திரகுமார் தலையிலான அமைப்பு தமிழீழத் தலைநகரில் போட்டியிடும் கேவலத்தையும் நாம் நோக்குகின்றோம். இந்த இரண்டு செயல்களும் எமது பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை மகிழ்விக்கும்படியான செயலே. இவர்களின் இதுபோன்ற செயல்கள் இந்த இரண்டு அமைப்புக்களுமே மகிந்தவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சென்றுகொண்டிருக்கின்றன என்கின்ற வாதத்தை நிருபிப்பதாகவே இருக்கின்றது.
எனவே, நாம் தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்கின்ற அபிலாசைகளைப் பெற்று நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக தம்முயிரைத் தியாகம் செய்த நாற்பதினாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின்; ஒப்பற்ற தியாகங்களை மனதில் நிறுத்தி பிரதேசவாதக் கருத்துக்களை முற்றாவே எம் தேசத்தின் எல்லைக்குள் அனுமதிக்காத நிலைப்பாட்டை ஈழத் தமிழர்கள் எடுக்கவேண்டும் என்று புலம்பெயர்ந்த வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (ஐரோப்பா) தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சினையை பிரதேசவாதத்தின் அடிப்படையில் அணுகும் பிள்ளையான்களையும் கஜேந்திரன்களையும் நடைபெறும் பொதுத் தேர்தலில் ஈழத்தமிழர் முற்றாக நிராகரித்து| எமது தமிழ் தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என்று புலம்பெயர்ந்த வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment